2024 கொனீபா மகளிர் உலகக்கிண்ண போட்டியில் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி சாதனை

கொனீபா மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட இறுதி ஆட்டம் கடந்த 08.06.2024 சனிக்கிழமை நோர்வேயின்  Bodøநகரில் நடைபெற்றது.சப்மி நாட்டு அணியினை எதிர்த்து தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி மோதியது.மிகவும் பலம் பொருந்தியதும் 2022 ஆம் ஆண்டின் உலககிண்ண வெற்றியாளருமாகிய சப்மி அணியினரை எதிர்த்து ஏழு நாடுகளில் இருந்து விண்ணப்பித்த 89 வீராங்கனைகளில் 22 பேரை நோர்வேயின் ஒஸ்லோவில் ஒன்றிணைத்து ஒரு வாரம் பயிற்சிகள் வழங்கி அணிக்கான பிணைப்பினை ஏற்படுத்திஎமது போராட்டம், தேசியத்தலைவர்,மாவீரர்கள் தொடர்பில் விசேட பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டு வீராங்கனைகளுக்கு உணர்வூட்டப்பட்டு அணியினை தயார்ப்படுத்தி  Bodø வில் நடைபெற்ற உலகக்கிண்ண போட்டியில் பங்கேற்று இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது.

பிற்பகல் 14.00 மணிக்கு ஆட்டம் கொடிவணக்கத்துடன் ஆரம்பமானது.ஆட்டத்தினை ஆரம்பிப்பதற்கு முன்னர் கொனீபாவின் அனுமதியுடன்    2009 மே  மாதம் முள்ளிவாய்க்காலில் இனவழிப்புக்கு உள்ளன அனைவரையும் நினைவுகூர்ந்து ஆட்டத்தினை ஆரம்பித்தனர். தொடக்கத்தில் இருந்தே  சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி   எதிரணிக்கு அச்சத்தினை ஏற்படுத்தினர்.எதிரணியினால் அடிக்கப்பட்ட பந்துகளை தனது சிறப்பான ஆட்டத்தின்மூலம் பந்துகாப்பாளர் சாரா தடுத்தாடினாள்.எமது வீராங்கனைகள் வேகம்,மதிநுட்பமான ஆட்டத்தினூடாக 13 வது நிமிடத்தில்  பிறீத்தி கொடுத்த அழகான பந்தினை டிலக்‌ஷிகா. சப்மி பந்து காப்பாளரின் தலைக்கு மேலால் வலைக்குள் அனுப்பினார்.இதன் மூலம் 1:0 என்னும் 75 வது நிமிடம்வரை முன்னணியில் நின்ற அணி நடுவரின் தவறான முடிவினால் தண்டனை உதை மூலம் ஒரு இலக்கினை எதிரணி பெற்று சமநிலையில் நின்றது.பின்னர் ஆட்டம் முடிவடைவதற்கு சில நிமிடங்கள் இருக்கும் போது கிடைத்த மூலை உதையினைப் பயன்படுத்தி சப்மி அணி இன்னொரு இலக்கினை அடித்து வெற்றிக்கிண்ணத்தினை தமதாக்கிக்கொண்டது. தாம் பங்கேற்ற முதல் உலகக்கிண்ண போட்டியில் இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகி உலகத்தமிழர்களின்  இதயங்களில் நீங்கா இடத்தினைப்பெற்று தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி இரண்டாம் இடத்தினைப்பெற்றுக்கொண்டது  

2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி கலந்து கொண்ட முதலாவது உலகக்கிண்ணப் போட்டியில் இறுதியாட்டத்திற்கு தெரிவாகி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

சிறப்பாக கூறவேண்டுமெனில் பல்வேறு நாடுகளில் இருந்தும் வருகைதந்த வீராங்கனைகளை ஒரு வார காலத்திற்குள் உலகக்கிண்ண போட்டிக்கு தயார்ப்படுத்திய பயிற்சியாளர்திரு தீபன் ,உதவிப்பயிற்சியாளர்கள் திரு எழில்,திரு சுஜன் அணிமேலாளர் திருமதி சங்கரி,உதவி அணி  மேலாளர் அஜனி , அணி மருத்துவ மேலாளர் அபிராமி, மகளிர் அணி மீடியா மேலாளர் சௌம்யா  அணியின் வெற்றியினை தங்கள் ஒவ்வொருவரின் வெற்றியாக எண்ணி உலகத்தமிழர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

விளையாட்டின் மூலம் பலமான அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தலாம் என்பதற்கு கடந்த காலங்களிலும் பல முன்னுதாரணங்கள் இருந்திருக்கின்றன 1968 இல் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டியில் ஆபிரிக்க அமெரிக்க வீரர்களான தொமி சுமித்,ஜோன் கார்லோஸ் ஆகியோர் Black power Saluteமூலம் அமெரிக்காவில் இருந்த இனத்துவேசத்துக்கு தமது பலமான எதிர்ப்பை உலக அரங்கில் வெளிப்படுத்தினர்.

அது போல உலகக் கிண்ண போட்டி ஒன்றில் தமிழீழ தேசிய கீதம் இசைக்கப்படும் போது தமிழீழ தேசியக்கொடியை ஏந்தியவாறு வீரர்கள் மைதானத்துக்குள் நுழைவதைப் பார்க்கின்ற உலகத்தமிழ் மக்களின் மனங்களில் தமிழீழ தேசம் மீதான பற்றுறுதி மேலும் வலுப்பெறும். அதுபோல உலகெல்லாம் வாழும்,ஏனைய விளையாட்டுக்களில் ஆர்வமும் திறமையும் கொண்ட  தமிழீழ வீரர்களுக்கும் தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணி முன்னோடியாக இருக்கும்.

கலை,கலாச்சாரம்,விளையாட்டு போன்றவை ஒரு தேசத்தின் ஆத்மாவை வெளிப்படுத்தும்,வளப்படுத்தும் விடயங்கள் ஆகும் . அந்த வகையில் விளையாட்டின் மூலம் தமிழீழத்தின் ஆத்மாவை உலக அளவில் வெளிப்படுத்த கொனீபா மிகப்பெரிய இடத்தை தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணிக்கு வழங்கியிருக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில் உலகமெல்லாம் பரவி வாழும் எம் தமிழ் உறவுகள் உங்களால் முடிந்த பொருளாதார பலத்தினை வழங்கி ஊக்கப்படுத்துமாறு அன்புரிமையுடன் வேண்டுகிறோம் எமது அணியின் சீருடைகளை வாங்கவும்  எமது அணிக்கு உங்கள் அன்பளிப்புகளை வழங்கவும்   https://tamileelamfa.net/donate/    என்ற எமது இணையதளத்தினை பார்வையிடவும்.


ஊடகப்பிரிவு

தமிழீழ உதைபந்தாட்ட சம்மேளனம்

Similar Posts